புதன், 7 செப்டம்பர், 2016

புறநானூறு :" பூக்காரிக்கு இரங்கு, எனக்கன்று"


இது புறநானூற்றுப் பாடல். 293. அழகிய இப்பாடலை நொச்சியூர் நியமங்கிழார் பாடியுள்ளார்.சங்க காலத்தில் இவ்வூர் நொச்சிநியமம் என்றிருந்தது என்பர்.

திணை: காஞ்சி. துறை: பூக்கோள் காஞ்சி.

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.

சினம்கொண்ட யானையின் மேலமர்ந்து தண்ணுமை (போர்க்கழைக்கும் பறை) முழக்கி, மறவர்களை அழைக்கின்றான் ஒருவன். மறவர்கள் அது கேட்டுக் காஞ்சிப் பூச்சூடி, அரணைச் சூழ்ந்துள்ள பகைப்படையை அழிக்கப்
புறப்பட்டு வருகின்றனர்.

அங்ஙனம் போந்த மறவன் ஒருவனின் மனைவி, வீட்டில் இருக்கிறாள். அப்போது அங்கு வந்த பூக்காரி, பூ வாங்குக என்று அவளிடம் கேட்கிறாள்.
காஞ்சி சூடிச் சென்றுவிட்ட கணவனை எண்ணியபடி, தான் பூச்சூடிக்கொள்ளாமல் இருந்த அவளுக்கு, அந்தத் தண்ணுமை ஒலி இரக்கம் காட்டுவது போலிருக்கிறது. தண்ணுமை ஒலியே!  எனக்கு இரங்காதே!.
அந்தப் பூக்காரிக்கு நீ இரங்கு. இந்த ஒலியால், அடுத்தடுத்து உள்ள மனைகளிலும் எந்த மறவனின் மனைவியும் பூ வாங்கமாட்டாளே. பூ விற்க முடியாத அவள் அல்லளோ இரக்கத்திற்கு உரியவள்......?

இவ்வாறு பாடுகிறார் நொச்சி நியமங்கிழார்.
தண்ணுமை ஒலிக்கிறதே, அது இரக்க உணர்வினை மேலெழுப்பும் ஒலி.
அந்த இரக்கத்திற்கு உரியோர் மறவர்களின் மனைவிமாரல்லர். பூக்காரிகள்
தாம்.  மறக்குலத்துப் பெண்டிர் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை.


தண்ணுமை முழக்குவோனும் அஞ்சுவதில்லை. அவனிருப்பது யானையின்
மேல். கீழ் நிற்கும் பகைவர் அவனைக் குத்த முடிவதில்லை." நிறப்புடைக்கு
ஒல்கா"  யானையின் மேலிருக்கிறான்.   கீழ்  நின்ற படி புடைத்தல் ‍ நிறப்புடை.
நின்ற> ‍ நிற.  னகர ஒற்றுக் குறைந்தது. புடைத்தல் ‍:  பக்கத்திலிருந்து குத்துதல். நில் > நிறு > நிற எனினும் அதுவே. அடிச்சொல் நில்.








கருத்துகள் இல்லை: